Tuesday, June 13, 2023

மீண்டும் 300 ரூபாவை கடந்த டொலரின் பெறுமதி


 இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியானது இன்றைய தினமும் (14) வீழ்ச்சி அடைந்துள்ளது.
நேற்றைய தினத்துடன் (13) ஒப்பிடுகையில்,
மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 291.96 ரூபாவிலிருந்து 303.63 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 309.23 ரூபாவிலிருந்து 321.60 ரூபாவாக உயர்ந்துள்ளது.
கொமர்ஷல் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 294.94 ரூபாவிலிருந்து 299.66 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 310 ரூபாவிலிருந்து 322 ரூபாவாக உயர்ந்துள்ளது.
சம்பத் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாவிலிருந்து 305 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 310 ரூபாவிலிருந்து 320ரூபாவாக உயர்ந்துள்ளது.

சாரதி உரிமப் பத்திரம் குறித்து தீர்மானம்


 
தனியாரிடம் இருந்து சுமார் 8 லட்சம் சாரதி உரிம அட்டைகளை அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அநுருத்த வீரசிங்க, திணைக்களத்தில் உள்ள அச்சுப்பொறிகளின் திறன் போதிய அளவில் இல்லாததால் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் பல மாதங்களாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சுமார் 20 கோடி ரூபாவை செலவிட்டு புதிய இயந்திரங்களை கொள்வனவு செய்ய முடியாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்புக்கு பொறுப்பான நிறுவனத்திடம் இருந்து அட்டை பிரிண்டர்களை பெற்று ஒவ்வொரு அட்டைக்கும் 150 ரூபா வீதம் செலுத்தும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிவாயு விநியோகம் தொடர்பில் சீனாவுடன் முக்கிய ஒப்பந்தத்தில் ரஷ்யா கைச்சாத்து


 ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் செவ்வாயன்று (13) ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான இயற்கை எரிவாயுவை தூர கிழக்கு பாதை வழியாக வழங்குவதற்கான ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் சட்டத்தில் கையெழுத்திட்டார்.
இந்த பாதை ரஷ்யாவில் உள்ள டால்னெரெசென்ஸ்க் நகருக்கு அருகில் உள்ள எரிவாயு நிலையத்தில் தொடங்கி, உசுரி ஆற்றின் வழியாகச் சென்று சீனாவில் உள்ள ஹுலின் ஏவுதளத்தில் முடிவடைகிறது.
முன்னதாக மே மாதம், ரஷ்ய பாராளுமன்றம் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான தூர கிழக்கு பாதை வழியாக எரிவாயு விநியோகத்தில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் சட்டத்தை ஏற்றுக்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.